இலங்கை கடற்படைக்கு: அமெரிக்காவின் ரூ.4 மில்லியன் பெறுமதியிலான செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பு கையளிப்பு.!!!
இலங்கை கடற்படையின் கடல்சார் தொடர்பாடல் மற்றும் செயற்பாட்டு திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) வழங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்த 22ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் டாக்டர் எஸ். பால் கபூர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். மேலும் இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
வருகை தந்த விருந்தினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட வரவேற்றார்.
நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் பால் கபூர், உலகின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக விளங்கும் இந்தப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த தொழில்நுட்ப உதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (Offshore Patrol Vessels – OPVs) நிறுவப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்ப வசதி, கடற்படையின் கடல்சார் கண்காணிப்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் அவசரகால நடவடிக்கைகளின் செயல்திறனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

