மின்சக்தி – எரிசக்தி திட்டங்கள் அவசர ஆய்வு; காலதாமதமின்றி நிறைவேற்ற ஜனாதிபதி உத்தரவு.!!!
இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான விசேட ஆய்வுக் கூட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணத்தை அண்மித்த நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க சக்தி முறைமை (HRES) திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தத் தீவுகளை முழுமையான “பசுமை ஆற்றல் தீவுகளாக” (Green Energy Islands) உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எண்ணெய் சேமிப்பு முனையங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் 14 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து பாரிய திட்டங்களும் எவ்வித காலதாமதமும் இன்றி, திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.

