உலக சாரணர் இயக்கத்தின் ஆசிய-பசுபிக் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்; 2027 ஜம்போரி நடத்துவது குறித்து கவனம்.!!!
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) சாரணர் குழுவின் தலைவர் கலாநிதி எம். சின் பின் பிடின் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், அக்குழுவினருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சந்திப்பின்போது, இலங்கை சாரணர் இயக்கத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, கிராமிய மட்டம் வரை அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் மற்றும் பிராந்திய சாரணர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்திற்கு, சர்வதேச அனுபவங்கள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்து, உலக சாரணர் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிய-பசுபிக் பிராந்திய பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
மேலும், 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆசிய-பசுபிக் சாரணர் ஜம்போரியை இலங்கையில் நடத்துவது மற்றும் அதற்கான அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதம ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாநாயக்கார, உலக சாரணர் இயக்கத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் உப தலைவர் தேவ் ராஜ் கிமிரே, ஆலோசகர் வெண்டல் இ. அவிசாடோ உள்ளிட்ட ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.







