வழிதவறி கடலில் சிக்கிய 17 வயது சிறுவன்; பாதுகாப்பாக மீட்ட இலங்கை கடற்படை.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மணல் திட்டில் சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கை கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ரோந்து நடவடிக்கையின்போது, தலைமன்னார் கடற்பரப்பில் மணல் திட்டொன்றில் சிக்கித் தவித்த நபர் ஒருவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், குறித்த சிறுவன் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்த நிலையில், வழிதவறி கடற்பரப்பில் சிக்கிக்கொண்ட 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிறுவனை கடற்படையினர் **தம்மென்னா** நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, அவருக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், குறித்த சிறுவன் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.



