அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டு: ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு.!!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அரச நிதி முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டு லண்டனுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது சுமார் ரூ.16.9 மில்லியன் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காகவே வழக்கு இன்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.