உள்ளூராட்சி சட்டங்களில் திருத்தம்; அமைச்சரவை அனுமதி.!!!
மாநகரசபைகள், நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் உள்ளிட்ட உள்ளூராட்சி தொடர்பான சட்டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி துறையுடன் தொடர்புடைய மேலும் 7 சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டம் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்காக நடைபெற்ற பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
காலத்திற்கு ஒவ்வாத விடயங்களைக் கொண்டுள்ள உள்ளூராட்சி சட்டங்களைத் திருத்துவதன் மூலம், தற்போதைய நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ற சட்டரீதியான மற்றும் நடைமுறைச் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரசாங்க நிர்வாக மட்டமாக இருப்பதால், பொதுச் சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் அவற்றுக்கு முக்கியப் பொறுப்பு காணப்படுகிறது.
எனினும், சபை நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான விடயங்களில் அதிகாரிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனை கருத்திற்கொண்டு, நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் தொழில்சார் ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
இதன்போது சபை அமர்வுகள், தீர்மானம் எடுக்கும் நடைமுறைகள், சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், குழுக்களின் செயற்பாடுகள், கொள்முதல் நடைமுறைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படும் நிர்வாக, சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் திறந்த கலந்துரையாடல்களும் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறுகின்றன.
இதன்மூலம் நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் திறம்பட வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.