பதவி விலகப் போவதில்லை; மீண்டும் பாராளுமன்றத்திற்கு அர்ச்சுனா.!!!
அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய அர்ச்சுனா ராமநாதன், தனது பதவியை முறையாக இராஜினாமா செய்யாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகக் கூறி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அர்ச்சுனா ராமநாதன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, குறித்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை தொடர்பான நீதிமன்ற உத்தரவு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அர்ச்சுனா ராமநாதன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு எதிரான வழக்கின் இறுதி முடிவைப் பொறுத்தே, அவர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.