கைது செய்யப்பட்ட ரவி கருணாநாயக்கவுக்கு பிணை; வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பு.!!!
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டமொன்றுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்க முன்னிலையானார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.