தரம் 1, 2 மற்றும் 6க்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்.!!!
தேசிய பாடத்திட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய, தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பான ஊடக வெளியீட்டில், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டு தரம் 1க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தும் பின்னர் ஒத்திவைக்கப்பட்ட தரம் 6க்கான கல்விச் சீர்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும், 2027ஆம் ஆண்டின் மூன்று தவணைகளுக்குமான தரம் 1 மற்றும் தரம் 2 செயற்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகள் அச்சிடுவதற்குத் தயாராகியுள்ளன. தரம் 6க்கான மூன்று தவணைகளையும் உள்ளடக்கிய பாடத் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் பயிற்சிகளும் ஏற்பாடு
தேசிய கல்வி நிறுவகம் அனைத்து பாடங்களுக்குமான முதன்மைப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளது. அத்துடன், மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
அரசின் கல்விச் சீர்திருத்த செயல்முறையில் பெறப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு, தேசிய கல்வி நிறுவகத்தால் முன்னதாகத் தயாரிக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே தற்போதைய புதிய பாடத்திட்டச் சீர்திருத்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிநடத்தல் குழுவின் அனுமதி கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி பெறப்பட்டதாகவும் அமைச்சரவைத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் 6 சீர்திருத்தம் 2027க்கு ஒத்திவைப்பு
பொதுக் கல்வியின் விரிவான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் ஆரம்பத் திட்டத்தின் கீழ், தரம் 1 மற்றும் தரம் 6க்கான புதிய பாடத்திட்டங்களை 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், 2026ஆம் ஆண்டில் தரம் 1க்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதுடன், தரம் 6க்கான சீர்திருத்தங்களை 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் முன்னதாக தீர்மானித்திருந்தது.
மேலும், தரம் 10 முதல் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
பல கட்டங்களில் மீளாய்வு
2019ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தால் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையும் 2023 மார்ச் 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
பின்னர் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்டது. தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகாரச் சபை மற்றும் நிறுவன சபை உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் பரிசீலிக்கப்பட்ட பின்னர், புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிநடத்தல் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2026ஆம் ஆண்டு தரம் 1ல் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டு தரம் 2 மற்றும் தரம் 6க்கும் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், பாடத்திட்டச் சீர்திருத்தம், மனிதவள மேம்பாடு, கல்வி நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு, மதிப்பீடு மற்றும் கணிப்பீடு, பொது விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளின் கீழ் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.