சுத்தமான கடற்கரை – பாதுகாக்கப்பட்ட கடல்; கடற்படையின் தூய்மைப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுப்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ செயலகமும் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து முன்னெடுக்கும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் தேசியத் திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை தூய்மைப்படுத்தும் தொடர் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய, நேற்று (23) கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் தென்கிழக்கு கடற்படைக் கட்டளைகளை மையமாகக் கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகள் இடம்பெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படைக் கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை கொட்பே கடற்கரைப் பகுதியிலும், வடக்கு கடற்படைக் கட்டளையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை தொண்டமானாறு கடற்கரைப் பகுதியிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று, வடமத்திய கடற்படைக் கட்டளையின் ஏற்பாட்டில் மன்னார் நடுக்குடா கடற்கரைப் பகுதியிலும், தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் ஏற்பாட்டில் அம்பாறை அக்கரைப்பற்று கடற்கரைப் பகுதியிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
கடற்கரை மற்றும் கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில், கடற்படையினர் ஏனைய அரச மற்றும் சமூகத் தரப்பினருடன் இணைந்து சமூக சேவைப் பங்களிப்பை வழங்கினர்.
கடல் வளங்கள் மற்றும் கடற்கரைச் சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







