மக்கள் உயிருக்கு ஆபத்தான விளம்பரப் பலகை; துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!!!
வவுனியா மாநகர சபையின் துரிதமானதும் பொறுப்பானதுமான நடவடிக்கையினால், பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் வேலைப்பகுதி மற்றும் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம், 33,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்வடங்கள் செல்லும் பகுதியில் ஆபத்தான நிலையில் பொருத்தப்பட்டிருந்த பாரிய விளம்பரப் பலகை ஒன்று பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரப் பலகை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மிகவும் ஆபத்தான முறையில் பொருத்தப்பட்டிருந்ததுடன், அதனைச் சுற்றிலும் உயர் மின்னழுத்த மின்வடங்கள் காணப்பட்டுள்ளன.
இதனால் விளம்பரப் பலகை உடைந்து விழுந்திருந்தால், பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, திட்டமிட்ட முறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் ஒத்துழைப்புடன், ஆபத்தான நிலையில் காணப்பட்ட விளம்பரப் பலகை பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
சிறிய தவறு ஒன்றுகூட மனித உயிரிழப்பு உள்ளிட்ட பாரிய அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடிய நிலையில், ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நிலைமையை அவதானித்து தாமதமின்றி நடவடிக்கை எடுத்த வவுனியா மாநகர சபையின் ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“மக்களின் பாதுகாப்பே எமது முதன்மையான பொறுப்பு. ஆபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே பொறுப்பான உள்ளூராட்சி நிர்வாகத்தின் கடமை” என வலியுறுத்தப்பட்டுள்ளது.





