உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.!!!
மக்களுக்கு விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படையான அரச சேவையை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உருவாக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய கட்டமைப்பு” தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் அடையாளம் கண்டு, அவற்றில் டிஜிட்டல் முறையில் வழங்கக்கூடிய மற்றும் வழங்க முடியாத சேவைகளை வகைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், தற்போதுள்ள டிஜிட்டல் கட்டமைப்புகள் அனைத்து சேவைகளையும் உள்ளடக்கியுள்ளனவா என்பதை ஆராய்ந்து, குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த தேசிய கட்டமைப்பு
பல்வேறு நிறுவனங்களால் தனித்தனியாக முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்குப் பதிலாக, முழுமையான அரச சேவையையும் உள்ளடக்கும் ஒருங்கிணைந்த தேசிய டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதற்காக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போதைய கட்டமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வரி, கட்டணம் உள்ளிட்ட சேவைகள் டிஜிட்டல் முறையில்
உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரி செலுத்துதல், விளம்பரப் பலகைக் கட்டணங்கள், விளையாட்டரங்குகள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல், விற்பனை நிலையங்களுக்கான வாடகை, நீர் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்கள் மற்றும் உரிமங்களைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக GovPay போன்ற டிஜிட்டல் கட்டமைப்புகளை மேலும் விரிவுபடுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை இலகுவாக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
300க்கும் மேற்பட்ட பிரதேச செயலக சேவைகள்
பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
தற்போது பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் 300க்கும் மேற்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் வரையிலான சேவைகளை ஒரே வலையமைப்பின் கீழ் இணைக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.
பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. நெல் கொள்முதல் மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் பெறப்பட்ட அனுபவங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஒரு மாவட்டத்தில் முன்னோடித் திட்டம்
பிரதேச செயலக டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், ஆரம்ப கட்டமாகத் தெரிவு செய்யப்படும் ஒரு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை ஒரு தொகுதியாக (Module) நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அத்துடன், அரச அதிகாரிகள் நியமனம் பெறும் நாள் முதல் ஓய்வுபெறும் காலம் வரையிலான அவர்களின் முழுமையான பணிச்செயற்பாடுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் “GovHR” டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

