அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!
சவூதி அரசாங்கத்தையும் அந்நாட்டின் மரபுகளையும் எதிர்க்கும் வகையில் செயற்பட்டால், அனோஜன் விவகாரம் மேலும் தீவிரமடையக்கூடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனோஜன் விவகாரம் தொடர்பில் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் மிகவும் அவதானத்துடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயத்தில் சவூதி அரேபியாவுக்கும் அந்நாட்டின் மரபுகளுக்கும் எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான மரபுகள் மற்றும் கலாசாரங்கள் காணப்படுவதால் அவற்றை மதித்து செயற்பட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து கொண்டு சவூதிக்கு எதிரான போராட்டங்கள் அல்லது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம். எனவே, அனைவரும் மிகவும் அவதானத்துடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்” என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அனோஜன் விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாகவும், அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகமும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.