“பயமின்றி கனவு காணுங்கள்” – மாணவர்களுக்கு கடற்படைத் தளபதி டேமியன் பெர்னாண்டோ அறிவுரை.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவரும், இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு புதன்கிழமை (09) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரிக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை, அதிபர் வணக்கத்திற்குரிய பிரியஞ்ஜீவ குணரத்ன ஆயர் தலைமையிலான ஆசிரியர் குழாம், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, புனித ஜோசப் வாஸ் உருவச்சிலைக்கு கடற்படைத் தளபதி மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், கல்லூரியின் மாணவச் சிப்பாய் படைப்பிரிவினரால் அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன், கல்லூரி பேண்ட் வாத்தியக் குழுவின் இசை முழக்கத்துடன் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
நிகழ்வில் கடற்படைத் தளபதிக்கு இறை ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றதுடன், கௌரவப் பாடல்களும் பாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய பிரியஞ்ஜீவ குணரத்ன ஆயர் வரவேற்புரையாற்றினார்.
மேலும், கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் திரு. மல்ராஜ் பலபிட்டியவும், முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் திருமதி ஷிமாலி பெர்னாண்டோவும், புனித ஜோசப் வாஸ் ஆரம்பப் பிரிவின் அதிபர் வணக்கத்திற்குரிய அமல் பிரசன்ன பெரேரா ஆயரும் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உள்ளிட்ட சபையினரிடம் உரையாற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றமைக்காக தமக்கு கௌரவமளிக்கும் வகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
புனித ஜோசப் வாஸ் கல்லூரிக்கு மீண்டும் வருகை தந்தது, தனது சொந்த வீட்டிற்குத் திரும்பியது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களிடம் உரையாற்றிய அவர், “பயமின்றி கனவு காணுங்கள்” எனக் கேட்டுக்கொண்டதுடன், உண்மையான நற்பண்பு பிரம்மாண்டமான தருணங்களில் உருவாகுவதில்லை என்றும், நேர்மை, ஒழுக்கம், பணிவு மற்றும் தோல்விக்குப் பின்னரும் மீண்டும் வெற்றிபெற முயற்சிக்கும் தைரியம் போன்ற அன்றாடத் தீர்மானங்களின் மூலமே அது கட்டியெழுப்பப்படுவதாகவும் வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக மட்டுமன்றி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தாயகத்திற்கு பெருமை சேர்க்கவும் “Domino Pro Patria” என்ற புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் உன்னதமான வாசகத்திற்கு ஏற்ப மாணவர்கள் வாழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, போதைப்பொருள் அச்சுறுத்தல் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கடற்படைத் தளபதி, போதைப்பொருள் பாவனைக்கான முதலாவது அழைப்பையே நிராகரித்து, அந்த ஆபத்தில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
போதைப்பொருளுக்கு அடிமையான நண்பர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுமாறும் அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் பெற்றோர்களிடம் உரையாற்றிய அவர், தமது பிள்ளைகளின் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும், அவர்களின் தவறுகள் மற்றும் குறைபாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது என்றும், தாங்கள் எத்தகைய நிலையிலிருந்து வந்தோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் பெற்றோர்களிடம் வலியுறுத்தினார்.
“ஜோசப் வாஸ் மாணவர்களின் இன்றைய தெரிவுகளே நாட்டின் நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்த கடற்படைத் தளபதி, மாணவர்கள் எப்போதும் பெருமையுடனும் நோக்கத்துடனும் தமது தாய்நாட்டிற்குச் சேவையாற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வை நினைவுகூரும் வகையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவினால் கல்லூரி வளாகத்தில் சந்தனக் கன்று ஒன்றும் நடப்பட்டது.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வில், புனித ஜோசப் வாஸ் கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள், தற்போது சேவையில் உள்ள கடற்படை உள்ளிட்ட சகோதரப் படைகளின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



















