போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு எதிராக அதிரடி; கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்.!!!
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி ஜீப் வாகனம் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் ஏழு சந்தேக நபர்களை பெலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளின்போது, பெலியகொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மஹார – கடவத்த பகுதியில் 19.90 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வீடு மற்றும் சின்ஹரமுல்ல – களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வீடு ஆகியவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு சொத்துக்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகிக்கப்படுகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2026 செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு குறித்த சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.