‘Gov Pay’ பெயரில் போலி இணையதளம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.!!!
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணையவழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Gov Pay’ அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘Gov Pay’ மூலம் பணம் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகளை பயன்படுத்தி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சேவையை இலகுபடுத்துவதுடன், நிதி மோசடிகளை குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ‘Gov Pay’ முறைமையின் ஊடாக செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், ‘Gov Pay’ அமைப்பை ஒத்த போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் இணைப்புகள் SMS மற்றும் WhatsApp செய்திகள் மூலம் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய இணைப்புகளை அணுகுவதன் மூலம் பொதுமக்களின் வங்கி தகவல்கள், ரகசியத் தரவுகள் மற்றும் பணம் மோசடியாகப் பெறப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, ‘Gov Pay’ மூலம் அபராதக் கட்டணம் செலுத்தும்போது அதிகாரப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறக்க வேண்டாம் எனவும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.