கணவனின் நண்பரால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் உயிரிழப்பு; காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்.!!!
–ஜே.கே–
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில், கணவனின் நண்பரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 68 வயதுடைய குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று (27) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண், கடந்த 23ஆம் திகதி கணவனின் நண்பருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் A.L. முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் கணவருடன் தங்கியிருந்த நிலையில், கணவனின் நண்பரான சந்தேகநபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











