ஆரோக்கியமான இலங்கைக்காக நாடு தழுவிய மரதன்; காத்தான்குடியில் நளிந்த கசுனுக்கு சிறப்பான வரவேற்பு.!!!
இலங்கை முழுவதும் மரதன் ஓடி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள மாத்தறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் நளிந்த கசுனுக்கு, காத்தான்குடியில் இன்று (26) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆரோக்கியமானதும் சுறுசுறுப்பானதுமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், தொற்றா நோய்களிலிருந்து விடுபட்ட இலங்கையை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாடு தழுவிய மரதன் ஓட்டப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
நளிந்த கசுன் கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தனது மரதன் ஓட்டப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (26) காத்தான்குடியை வந்தடைந்த அவருக்கு, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது அவருக்கு மாலை அணிவித்து, இஸ்லாமிய பாரம்பரிய கலை, கலாசார முறைகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவர் பரீட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபின், அதிபர் ரசூல், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ரஹீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
25 நாட்களில் 25 மாவட்டங்களை கடக்கும் இலக்குடன் மரதன் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள நளிந்த கசுன், தனது சொந்த மாவட்டமான மாத்தறையில் இப்பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
அவர் தினமும் சுமார் 42.195 கிலோமீற்றர் தூரம் மரதன் ஓடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எம்.எஸ்.எம்.நூர்தீன்-



