அரச வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்திய விவகாரம்: முன்னாள் அமைச்சர் பௌசிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு.!!!
• ரூ.66 லட்சம் திறைசேரிக்கு செலுத்த உத்தரவு – பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிப்பு.
-எஸ். ஜே. புஹாது-
அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ரூ.66 லட்சத்துக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை திறைசேரியின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு செலுத்துமாறு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் சிரேஷ்ட அமைச்சராகப் பதவி வகித்த பௌசிக்கு குறிப்பிட்ட அமைச்சுப் பொறுப்பு ஒதுக்கப்படாத நிலையில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்குச் சொந்தமான வாகனம் அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரச வாகனத்தை இவ்வாறு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தியமை, அரச சொத்துக்களின் முறையான பயன்பாடு தொடர்பில் கேள்விகளை எழுப்பியதுடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கட்டணத்தை செலுத்த கால அவகாசம்
நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.16,64,334.93 தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சிலுமின, சண்டே ஒப்சர்வர் மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆகிய பத்திரிகைகளில் குறித்த அரச வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப் பக்க விளம்பரம் வெளியிட்டு, பொதுமக்களிடம் மன்னிப்புக் கோருமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு
குறித்த அரச வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் 2024ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பான இந்த வழக்கில், அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான பொறுப்புக்கூறல் தொடர்பிலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.