எல்-நினோ பாதிப்பை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை; தொழில் இழப்போருக்கு நிவாரணம் வழங்க புதிய திட்டம்.!!!
எல்-நினோ காலநிலை தாக்கத்தால் தொழில் இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய செயற்திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, எல்-நினோ தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பது மற்றும் நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.
இதேவேளை, பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பை செப்டெம்பர் 4ஆம் திகதி நடத்தவும், எல்-நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் Zoom தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை செப்டெம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



