மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பரிசளிப்பு சர்ச்சை: கிண்ணத்தைப் பெற மறுத்த இந்திய மகளிர் அணி.!!!
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 8ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.
எனினும், போட்டியின் நிறைவுக்குப் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஏற்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைவரும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கங்களைப் பெற இந்திய மகளிர் அணி மறுத்துள்ளது.
இந்த முடிவு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) எடுக்கப்பட்டதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் மற்றும் செயலாளர் தேவஜித் சாய்கியா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
45 நிமிடங்களுக்கு மேல் தாமதம்
போட்டி நிறைவடைந்த பின்னர் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பிப்பதில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.
இதன்போது மொஹ்சின் நக்வி மேடையில் இருந்த நிலையில், இலங்கை அணிக்கு இரண்டாம் இடத்துக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து அவற்றைப் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி உள்ளிட்ட தனிநபர் விருதுகள் மேடையில் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேடைக்கு வராத இந்திய வீராங்கனைகள்
பரிசளிப்பு நிகழ்வின்போது இந்திய வீராங்கனைகள் மேடைக்கு வரவில்லை. ஆசியக் கிண்ணத்தை மொஹ்சின் நக்வியிடமிருந்து நேரடியாகப் பெறுவதற்குப் பதிலாக, ஆசியக் கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி அல்லது வெற்றி பெற்ற அணியின் பிரதிநிதி ஒருவரிடம் கிண்ணத்தை வழங்குமாறு இந்தியத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தக் கோரிக்கையை நக்வி ஏற்க மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் தங்களது சொந்தக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு ஆடை மாற்றும் அறைக்குத் திரும்பியுள்ளனர்.
அரசியல் பதற்றத்தின் பின்னணி
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியிலும் மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய ஆடவர் அணி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றத்தின் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கைகுலுக்கலைத் தவிர்ப்பது உள்ளிட்ட சில நடைமுறைகளை இந்திய அணி கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், கிண்ணத்தைப் பெறாதிருந்தாலும் தாங்கள் ஆசியக் கிண்ணச் சம்பியன்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





