இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதியுடன் உயர்மட்ட ஆலோசனை; மறுசீரமைப்புக்கு அரசின் முழு ஒத்துழைப்பு.!!!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவினருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணியில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தினார்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட குழு உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை கிரிக்கெட்டின் நீடித்த வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

