காத்தான்குடி சம்பியன் கிண்ணத்தை – ஏறாவூர் YSSC கைப்பற்றியது.!!!
• 6–0 கோல் கணக்கில் அபார வெற்றி; ரூ.50,000 பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும் வசம்.
-எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்-
காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ண 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (28) மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் சங்கத்தின் தலைவர் என்.கே.எம். அரபாத் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 41 கால்பந்தாட்டக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் YSSC-B அணியும் ஏறாவூர் FC அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஏறாவூர் YSSC-B அணி 6–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 2026 சம்பியன் கிண்ணத்தையும் ரூ.50,000 பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற ஏறாவூர் FC அணிக்கு ரூ.30,000 பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டன. மூன்றாம் இடத்தைப் பெற்ற காத்தான்குடி சவுண்டர்ஸ் அணிக்கு ரூ.20,000 பணப்பரிசும் கிண்ணமும், நான்காம் இடத்தைப் பெற்ற பாலமுனை நேஷனல் விளையாட்டுக் கழகத்திற்கு ரூ.10,000 பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டன.
இப்போட்டித் தொடரில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்ட கர்பலா கால்பந்தாட்டக் கழகத்திற்கு, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கலீல் பாரி விளையாட்டு உபகரணங்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும், போட்டித் தொடரில் பணியாற்றிய நடுவர்களுக்கு நினைவுப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை காத்தான்குடி நூரி புத்தக நிலையத்தின் பணிப்பாளர் எம். அஜ்மீர் வழங்கி வைத்தார். நிகழ்வில் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் பீ.எம்.எம். இர்ஷாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரவு நேர மின்னொளியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியை காண ஏராளமான கால்பந்தாட்ட ரசிகர்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















