காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்: மீண்டும் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமனம்.!!!
காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறும் வரை செயற்படுவதற்கான இடைக்கால நிர்வாக சபை நேற்று (09) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய அதிகாரி எம்.எம். மஸீன் (இஸ்லாஹி) மற்றும் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா சபை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர் (பலாஹி) ஆகியோர் முன்னிலையில், பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இடைக்கால சபையின் தலைவராக எம்.எம்.எம். ஜறூப், செயலாளராக என்.எம்.ஏ. கரீம், பொருளாளராக எம். அனீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எச்.எம்.ஏ. ஜப்பார், எம்.ஐ.எம். ஹாரிஸ் மற்றும் எம்.ஐ.எம். இர்பான் ஆகியோர் உப தலைவர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
பள்ளிவாயலின் நிர்வாக சபைக்கான 21 உறுப்பினர் பதவிகளுக்காக 55 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சுமார் 2,000 ஜமாஅத்தார்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறையில் நிர்வாகத் தெரிவு இடம்பெற்று வந்த இப்பள்ளிவாயலில், கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயக அடிப்படையிலான தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதுடன், நிர்வாகத் தெரிவில் ஏற்படக்கூடிய கருத்து முரண்பாடுகள் மற்றும் செல்வாக்குச் செலுத்தல்களும் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தலை சுமுகமாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கான பொறுப்பை இடைக்கால நிர்வாக சபை மேற்கொள்ளவுள்ளது.






