2027 முதல் சாதாரண தரப் பரீட்சையில் அதிரடி மாற்றம்; 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை.!!!
2027ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை (G.C.E. O/L) 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை குறித்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.
புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் அமைக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள் இடம்பெறவுள்ளதுடன், அவற்றில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதனிடையே, 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.