மாணவர் போசாக்கிற்காக அரசாங்கத்தின் பாரிய நிதி ஒதுக்கீடு – ரூ.33,600 மில்லியன்.!!!
2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.33,600 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது “தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026” நிகழ்வில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 8,990 பாடசாலைகளைச் சேர்ந்த 15 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தற்போது அரசாங்கத்தின் பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை உணவுத் திட்டத்தை வெறுமனே மாணவர்களின் பசியைத் தீர்க்கும் திட்டமாக மட்டுப்படுத்தாமல், நாட்டில் அதிகரித்து வரும் போசாக்கின்மை, வளர்ச்சி குன்றுதல் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட சுகாதார சவால்களுக்கு தீர்வளிக்கும் நீண்டகால முதலீடாக மாற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பாடசாலை உணவுத் திட்டத்தை உள்ளூர் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் உள்ள தாய்மார்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இத்திட்டத்தைப் பயன்படுத்த முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு உணவு வீணாக்கத்தைத் தவிர்த்தல், நிலைபேறான உணவு முறைகள், விவசாயம் மற்றும் போசாக்குத் துறைகளில் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகள் தொடர்பில் அறிவூட்டுவதற்கும் பாடசாலை போசாக்குத் திட்டத்தை ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை போசாக்குத் திட்டத்தின் எதிர்கால விரிவாக்கம், ஆராய்ச்சி தரவுகளின் பயன்பாடு மற்றும் திட்டத்தின் தரம் மற்றும் நிலைபேறுத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பதிகாரி டேவிட் மையர்ஸ், Save the Children நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.






