மெட்ரோ பேருந்து சேவை நாடு முழுவதும் விரிவடையும்; 172 பேருந்துகளாக அதிகரிக்க திட்டம்.!!!
மேல் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவையை காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடவத்தை மெட்ரோ பேருந்து டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை இன்று (07) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 50 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையை 172 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன் மூலம் மேல் மாகாணத்திற்கு அப்பால் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


