இலங்கை சுங்கத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; காகிதமற்ற ஆவண முறை ஆரம்பம்.!!!
இலங்கை சுங்கத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவும் இலங்கை சுங்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த முறைமை ஆரம்பிக்கும் நிகழ்வு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் இலங்கை சுங்க கேட்போர் கூடத்தில் நேற்று (01) நடைபெற்றது.
இதன்படி, இன்று முதல் அனைத்து இறக்குமதியாளர்களும் தங்களது சுங்கப் பிரகடனங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பத்துடன் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பழைய நடைமுறையில் காகித வடிவில் சமர்ப்பிக்கப்படும் சுங்க ஆவணங்கள் இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமையின் ஊடாக சுங்க அனுமதி நடவடிக்கைகளை விரைவாகவும், திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகளையும் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 1,144 நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் முறைமையுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றைச் சாளரத்தை நோக்கிய முக்கிய மைல்கல்
நிகழ்வில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கை சுங்கத்தின் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல் என தெரிவித்தார்.
வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய தேசிய ஒற்றைச் சாளரக் கட்டமைப்பை உருவாக்கும் பணியின் முக்கிய கட்டமாக இந்த முறைமை அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.
இணையவழியாக இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்ட சுங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுவதுடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நேரம், பணம் மற்றும் வளங்களை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை சுங்கம் தற்போது இந்த ஆண்டுக்கான 2,207 பில்லியன் ரூபா வருமான இலக்கை நெருங்கி வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் ஆண்டில் மூலதனச் செலவினத்தை 1,300–1,400 பில்லியன் ரூபா அளவிலிருந்து 2,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுங்கத்தை ஆசியாவின் முன்னணி நிறுவனமாக மாற்ற இலக்கு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதுடன், வர்த்தகத்திற்கான தடைகள் மற்றும் செலவுகளை குறைப்பது அவசியம் என தெரிவித்தார்.
இதற்காக ஜனாதிபதி செயலகத்தில் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுங்கத் திணைக்களத்தை தெற்காசியாவில் மாத்திரமன்றி, ஆசியாவிலேயே முன்னணி சுங்க நிறுவனமாக மாற்றுவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் இந்த முறைமை முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
காகிதமற்ற முறைமை அறிமுகப்படுத்தப்படும்போது வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து புதிய முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச நிறுவனங்களின் கூட்டுச் செயற்பாட்டின் விளைவு
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்கள் தற்போது கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையின் மூலம் மக்கள் சேவைகளைப் பெற செலவிடும் நேரத்தையும் செலவையும் குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
பல அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றத்தில் சுங்கம் முன்னணி
இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை சுங்கம் தகவல் தொழில்நுட்பத்தை அரச சேவையுடன் இணைப்பதில் முன்னணி நிறுவனமாக செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
1990களின் ஆரம்பத்திலிருந்தே தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்ட சுங்கம், தற்போது முன்னெப்போதையும் விட அதிக செயற்திறனை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையின் ஆரம்பம் மிக முக்கியமான முன்நகர்வு எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலர் சீவலி அருக்கொட, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, திறைசேரி பிரதி செயலாளர் டி. ஜே. செனவிரத்ன உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





