ஊழல், முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தினால் எவரும் தப்ப முடியாது – ஜனாதிபதி.!!!
அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அவற்றுக்குப் பொறுப்பானவர்களில் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்தபோதே கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளின் உண்மையான அளவை அறிந்துகொள்ள முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
வெளியில் இருந்தபோது நாட்டில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் தாம் பேசிவந்ததாகவும், ஆனால் ஆட்சிக்குள் வந்து ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்தபோது நாட்டுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காண முடிந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“நாங்கள் வெளியே இருந்தபோது ஊழல்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொன்றாக ஆராயும்போது, நமது நாடு எவ்வளவு பெரிய தவறுகளை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் சொத்துக்கள் மற்றும் நாட்டின் வளங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.