பாலியல் கல்வியை எதிர்ப்பது ஆபத்தானது; HIV மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து அமைச்சர் எச்சரிக்கை.!!!
இலங்கையிலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி அறிவை வழங்குவதற்கான தேசிய பாலியல் கல்வி தகவல் தொடர்பு வழிகாட்டுதல்கள் (National Sexuality Education Communication Guidelines) நேற்று (15) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவியல் அடிப்படையிலான பாலியல் கல்வி வழங்கப்படுவது காலத்தின் தேவையாகும் என வலியுறுத்தினார். பாலியல் கல்வியைத் தடுப்பவர்கள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் HIV உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வழிகாட்டுதல்கள் மூலம் சரியான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு சமூகத்திற்குக் கொண்டு செல்லப்படுவதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, பாலியல் வன்முறைகளைத் தடுப்பது மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது போன்ற இலக்குகள் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


