நிர்மாணத் துறையை வலுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.!!!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் நிர்மாணத் துறையின் முக்கிய தரப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் நிர்மாணத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. நிர்மாணத் துறையை மீண்டும் வலுப்படுத்தி, அதன் நிலைபேறான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, துறைசார் தரப்பினர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.
நிர்மாணத் துறை தற்போது எதிர்கொண்டுள்ள பிரதான சவால்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அவற்றுக்கு விரைவானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய தலையீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
நிர்மாணத் துறை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நேரடியாகப் பங்களிப்பு செய்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்துறையில் காணப்படும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும உள்ளிட்ட நிர்மாணத் துறையின் பல்வேறு தரப்பினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.






