முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, சமய உரிமைகள் குறித்து ஜனாதிபதி முக்கிய உறுதி.!!!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஜனாதிபதி இன்று (10) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காமல், அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.
அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதிப்புக்குள்ளாக்கி வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டங்களுக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
சந்திப்பின்போது, முஸ்லிம் சமூகத்தினர் தமது சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
எந்தவொரு சமூகமும் தமது கலாசார அடையாளத்தின் காரணமாக பாதுகாப்பற்ற நிலை அல்லது அச்சத்தை எதிர்கொள்ளாத வகையில், அனைவருக்கும் பாதுகாப்பான சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், நாட்டில் அனைத்து சமூகங்களும் சமத்துவத்துடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.



