முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹதுருசிங்கவுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு; நீண்டகால சட்டச் சிக்கலுக்கு தீர்வு.!!!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த சட்டச் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அவருக்கு 164,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ.5.5 கோடி) இழப்பீடாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் (SLC) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் (CAS) தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின் பிரகாரம், அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கிய வகையில் மொத்தமாக 200,000 அமெரிக்க டொலர்களை வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தியதன் மூலம், ஹதுருசிங்கவுடன் தொடர்புடைய நீண்டகால சட்டப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திக ஹதுருசிங்க 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கை தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார்.
அவரது பயிற்றுவிப்புக் காலத்தில் இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியும், 38 போட்டிகளில் தோல்வியும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.