பொதுநலவாய தங்கப் பதக்க வீரர் ரொமேஷ் தரங்கவுக்கு விமானப்படையில் பதவி உயர்வு; பணப் பரிசுடன் கௌரவிப்பு.!!!
அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் (Javelin Throw) போட்டியில் உலகத் தரத்திலான வீரர்களை பின்னுக்குத் தள்ளி இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுத் தந்த இலங்கை விமானப்படையின் கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்கு விமானப்படையினால் விசேட பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அவர் பெற்றுத்தந்த இந்த மகத்தான பெருமையையும், இதற்கு முன்னர் அவர் விளையாட்டுத் துறையில் பெற்றிருந்த சாதனைகளையும் பாராட்டி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் பணிப்புரையின்படி ரொமேஷ் தரங்க, கோப்ரல் பதவியிலிருந்து சார்ஜன்ட் (Sergeant) பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
பதவி உயர்வுடன், அவரது அபாரமான சாதனையைப் பாராட்டும் வகையில் விசேட நிதிப் பரிசும் விமானப்படைத் தளபதியினால் வழங்கப்பட்டது.
மேலும், இந்த வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்ன மற்றும் உடற் சிகிச்சை நிபுணரான கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளையும் பாராட்டி அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விசேட கௌரவிப்பு மற்றும் பாராட்டு நிகழ்வு இன்று (05) இலங்கை விமானப்படை தலைமையகத்தில் விமரிசையாக நடைபெற்றது.

