சிறு மழைக்கே குளமாகும் சேகு லெப்பை வீதி: நிரந்தரத் தீர்வுக்காகக் காத்திருக்கும் பிறைந்துரைச்சேனை மக்கள்.!!!
வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பகுதியில் அமைந்துள்ள சேகு லெப்பை வீதி, சிறிய மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளதுடன், முறையான வடிகால் வசதியின்மை மற்றும் வீதியின் தாழ்வான அமைப்பு காரணமாக மழைநீர் தேங்கி நிற்பதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாணவர்கள், பொதுமக்கள் அன்றாடம் அவதி
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, அஸ்கர் வித்தியாலயம், சாதுலியா வித்தியாலயம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், இவ்வீதியைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் வீதியில் நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கும் பாதசாரிகளின் பயணத்துக்கும் இடையூறுகள் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரப் பாதிப்புகள் குறித்தும் அச்சம்
தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் வீடுகளுக்குள் நீர் புகுந்து, அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நுளம்புகளால் பரவும் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் குறித்தும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், மழைக்காலங்களில் குடிநீர்க் கிணறுகள் மற்றும் மலசலகூடங்களைப் பயன்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரைகுறை அபிவிருத்திப் பணிகளே காரணமா?
தாஜ்மஹால் வீதி மற்றும் அஸ்கர் வித்தியாலய வீதியுடன் இணையும் பகுதிகளில் கொங்கிறீட் வீதிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், சாதுலியா வித்தியாலய வீதியுடன் இணையும் சேகு லெப்பை வீதியின் ஒரு பகுதி உரிய முறையில் புனரமைக்கப்படாமல் தாழ்வான நிலையில் காணப்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முறையான வடிகால் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படாததே நீர்த்தேக்கப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுகோள்
இப்பகுதியில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.
அத்துடன், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொண்டு, நீர் வடிந்தோடுவதற்கான முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, வீதியைத் திட்டமிட்ட முறையில் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
மக்களின் அன்றாடப் பயணம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பிறைந்துரைச்சேனை சேகு லெப்பை வீதியின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமா என்பதே தற்போது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
