திருகோணமலை நீதிமன்றத்தில் இரு சந்தேகநபர்கள் தமக்குத் தாமே காயம் ஏற்படுத்திய சம்பவம்: ஐவருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்.!!!
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தமக்குத் தாமே காயம் ஏற்படுத்திக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், 48 மணித்தியால பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
நீதிமன்ற நடவடிக்கைகளின்போது சந்தேகநபர்கள் இருவர் தமக்குத் தாமே காயம் ஏற்படுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பொலிஸார் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து பேருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸார் தமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகச் சந்தேகநபர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.