கைது அச்சத்தில் நீதிமன்றத்தை நாடிய ஷிரந்தி ராஜபக்ஷ; முன்கூட்டிய பிணை மனு தாக்கல்.!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, தாம் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகக் குறிப்பிட்டு, முன்கூட்டிய பிணை கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று (05) மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தாம் கைது செய்யப்படும் பட்சத்தில், எவ்வித நிபந்தனைகளின் கீழாவது பிணையில் விடுவிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷ தனது மனுவில் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எதிர்மனுதாரராகவும், ஷிரந்தி ராஜபக்ஷ மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த முன்கூட்டிய பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.