இலங்கை–லிதுவேனியா இடையே முதலாவது அரசியல் ஆலோசனை; பல துறைகளில் புதிய ஒத்துழைப்புக்கு வாய்ப்பு.!!!
இலங்கை மற்றும் லிதுவேனியா இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெற்றுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் லிதுவேனியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் விட்மந்தாஸ் வெர்பிக்காஸ் ஆகியோர் இக்கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.
இலங்கை – லிதுவேனியா இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
லேசர் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு
லிதுவேனியாவின் லேசர் மற்றும் ஒளியியல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் பெறுமதி சேர்க்கும் வகையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், GovTech, FinTech, டிஜிட்டல் அரச சேவைகள், 5G தொழில்நுட்பம், அலைக்கற்றை நிர்வாகம் மற்றும் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
GSP+ சலுகை தொடர்பிலும் கவனம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகையின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியதுடன், அடுத்த GSP கட்டமைப்புக்கான தயாரிப்புகளின்போது லிதுவேனியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் கோரியுள்ளது.
மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, நிலையான தொழில்கள், தொழிலாளர் நகர்வு, கல்வி மற்றும் ஆராய்ச்சி, காலநிலை நடவடிக்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இலங்கைத் திறமையான தொழிலாளர்களுக்கான வெளிப்படையான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விசா நடைமுறைகளை இலகுபடுத்துதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதனிடையே, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள், பல்தரப்பு ஒத்துழைப்பு, எதிர்கால உயர்மட்ட அரசியல் மற்றும் நாடாளுமன்ற ஈடுபாடுகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
முதலாவது அரசியல் ஆலோசனையானது, 30 ஆண்டுகால இலங்கை–லிதுவேனியா இராஜதந்திர உறவுகளை வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் இரு நாட்டு மக்களுக்கான புதிய வாய்ப்புகளாக விரிவுபடுத்துவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



