இலங்கையின் 2026–2029 அபிவிருத்தி பயணம்; ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் முக்கிய ஆலோசனை.!!!
இலங்கையின் 2026–2029 காலப்பகுதிக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ADB இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌல் ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான ADB வருடாந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், ADB-யின் நீண்டகாலத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் காணுதல், ADB நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் அரசாங்கத்தின் உரிமையை உறுதிப்படுத்துதல் மற்றும் அரசாங்க நடைமுறைகளுக்கும் ADB நடைமுறைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட சலுகை அடிப்படையிலான நிதி வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அதிகபட்ச பயனுடன் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், அரச நிதி இலக்குகளை விரைவாக அடைவதில் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளை முன்வைப்பது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்கான திட்ட மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் 2026 ஒக்டோபர் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலதிக செயலாளர் டப்ளியு. டி. ஆர். கிரிசாந்த, ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா உள்ளிட்ட அரச அதிகாரிகளும், ADB-யின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



