பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி விரிவுரையாளர்கள் போராட்டம்.!!!
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் போராட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலத்தில் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து சுமார் 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், அதேவேளை ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் சுமார் 25,000 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் 45,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், விரிவுரையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.