1990 தமிழர் படுகொலை: 36 ஆண்டுகளுக்குப் பின் கல்முனையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு.!!!
-பாறுக் ஷிஹான்-
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி சந்தியில் சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை வாழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் முதலில் விளக்கேற்றல் நடைபெற்றதுடன் தொடர்ந்து 1 நிமிட மௌன அஞ்சலி இறந்தவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சம்பவ நாட்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எதிர்கால சந்ததிகள் நலன் கருதி தத்தமது உரைகளில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
1990 ஜூன் மாதம் 11 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுமார் 600 க்கும் அதிகமான பொலிஸாரைப் படுகொலை செய்ததை அடுத்து கல்முனை நகர் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கல்முனை நகரில் இருந்து வெளியேறினர். இதையடுத்து பொதுமக்கள் மீதான தாக்குதல் 1990 ஜூன் மாதம் 20 இல் ஆரம்பமானது.
இதன் போது கல்முனை வாடி வீட்டு சந்தியில் நிலைகொண்டு ராணுவம், துணை இராணுவ குழுக்கள் இணைந்து தமிழ்ப் பொதுமக்களைக் கடத்தினர் என்றும் பின்னர் அவர்கள் அனைவரையும் அங்குள்ள கடைகளுக்குப் பின்னால் வைத்து எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 1990 ஜூன் மாதம் 27 இல் 75 பொதுமக்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டனர்.
மேலும் 27 பேரின் தலையற்ற உடல்கள் கல்முனைக் கடற்கரையில் கரையொதுங்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. மேலும் மொத்தமாக 7,000 பேர் வரை 1990 ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டனர் என அவ்வமைப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.








