ஆமணக்கு விதைகள் சாப்பிட்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!!!
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில், சூரியகாந்தி விதைகள் என தவறாக நினைத்து ஆமணக்கு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த விதைகளை தனது வகுப்பு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றை சூரியகாந்தி விதைகள் என எண்ணி சாப்பிட்ட மாணவர்களில், 20 ஆண் மாணவர்களும் 2 பெண் மாணவர்களும் சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர் வழக்கமாக சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. எனினும், இம்முறை ஆமணக்கு விதைகள் சூரியகாந்தி விதைகளுடன் கலந்திருந்ததை அறியாமல் அவற்றையும் சேர்த்து கொண்டு வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.