24½ பவுண் தங்க நகைகள் திருட்டு: கல்வி கற்று வந்த யுவதி கைது; அனைத்து நகைகளும் மீட்பு.!!!
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 24½ பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கல்வி கற்று வந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்தில், தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்கள் காணாமல் போயிருந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த களுவாஞ்சிகுடி பொலிஸார், திங்கட்கிழமை (03) முன்னெடுத்த தீவிர நடவடிக்கையின் மூலம் திருடப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதியையும் கைது செய்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரின் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையில், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதீப் களுபாலவின் வழிகாட்டுதலிலும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் லீலாரத்னவின் பணிப்புரையின்படியும், களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர். யூட் றொமேஸின் நேரடி கண்காணிப்பில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி. ஜோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையையும் நகைகள் மீட்பையும் மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.