34 ஆண்டுகள் அர்ப்பணிப்பு சேவை; காத்தான்குடியின் முதல் பெண் வைத்தியருக்கு கௌரவிப்பு.!!!
காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்ததான சேவையின் ஊடாக எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் பங்களிப்பு செய்த டாக்டர் அலிமா ரஹ்மான் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அவரது 34 ஆண்டுகால சிறப்புமிக்க மருத்துவ சேவையைப் பாராட்டும் விசேட நிகழ்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மெரின் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் குருதிக் கொடையாளர் சம்மேளன செயலாளர் றிபாய் கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு டாக்டர் அலிமா ரஹ்மானை நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் கல்வியலாளர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
காத்தான்குடியின் முதல் பெண் வைத்தியர் என்ற பெருமைக்குரிய டாக்டர் அலிமா ரஹ்மானின் நீண்டகால மருத்துவ சேவையைப் பாராட்டும் வகையில் இக்கௌரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










