மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை: ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிப்பு.!!!
மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய நபருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், நேற்று வியாழக்கிழமை (29) இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வாழைச்சேனையைச் சேர்ந்த குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், 2022ஆம் ஆண்டு குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி சந்தேகநபர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த முதலாவது குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அத்துடன், ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ததாகச் சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
விதிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.