மக்கள் நலத் திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை; மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்.!!!
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் இன்று (31) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் முன்னர் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையை வர்த்தமானிப்படுத்தல், முந்தனையாறு அபிவிருத்தி, கிரான் பொண்டுகள்சேனை பாலம், மண்டூர்–குருமன்வெளி மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை ஆராயப்பட்டதுடன், அம்பிளாந்துறை–குருக்கல்மடம், திகிலிவெட்டை–சந்திவெளி, நரிப்புல் தோட்டம்–பங்குடாவெளி பகுதிகளில் புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மனித–யானை மோதல்களை கட்டுப்படுத்தல், மட்டக்களப்பு வாவியை தூர்வாரி வெள்ள அபாயத்தை குறைத்தல், மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான சாத்தியவாய்ப்பு, நெற்கொள்வனவு, விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றுச்சூழல், வீதி அபிவிருத்தி, யானை வேலிகள் அமைத்தல், சிறு குளங்கள் புனரமைத்தல், பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைத்தல், காணி பிரச்சினைகள், ஆளணி பற்றாக்குறை, குடிநீர் வழங்கல் மற்றும் கிறவல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரைகள் வழங்கியதுடன், மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார். மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.














