அரசின் சட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு காத்தான்குடியில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு.!!!
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு, நேற்று (01) காலை பீச்வே ஹோட்டலில் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்துடன் இணைந்து நடைபெற்ற இக்கருத்தரங்கு, சம்மேளனத்தின் பதில் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.சி.எம்.ஏ. சத்தார் தலைமையில் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம் (OCA) ஆகியவற்றின் வரைபுகளை மீளாய்வு செய்து, அவற்றின் சாதக, பாதகங்கள், சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்வதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
இக்கருத்தரங்கை ஓய்வுபெற்ற ஆசிரியர் யூ.எல்.எம்.என். முபீன் நெறிப்படுத்தினார்.
கருத்தரங்கின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடப் பேராசிரியர் கலாநிதி ஹக்கீம் அபூபக்கர், குறித்த இரண்டு சட்டமூலங்களையும் விரிவாக ஆய்வு செய்து அவை தொடர்பான விமர்சனப் பார்வைகளை முன்வைத்தார்.
குறிப்பாக, சட்டமூலங்களிலுள்ள சாதக, பாதக அம்சங்கள், எதிர்காலத்தில் சமூக மட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், திருத்தப்பட வேண்டிய சட்டப் பிரிவுகள், முன்வைக்கப்பட வேண்டிய பின்னூட்டல்கள் மற்றும் இச்சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் ஆகியவற்றைச் சமகால உதாரணங்களுடன் விளக்கினார்.
அத்துடன், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருளிங்கம் மற்றுமொரு விரிவுரையை நிகழ்த்தினார்.
இதன்போது, குறித்த சட்டமூலங்கள் தொடர்பான தனது விமர்சனப் பார்வையையும் அபிப்பிராயங்களையும் முன்வைத்த அவர், ஏனைய சட்டங்களுடன் ஒப்பிடுகையில் இச்சட்டமூலங்களில் காணப்படும் பாதகமான அம்சங்கள், அவற்றின் பின்னணிகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
மேலும், அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக, இச்சட்டமூலங்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியதுடன், அவற்றின் சாதக அம்சங்களைவிட பாதக அம்சங்களே அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைதீன், குறித்த இரண்டு சட்டமூலங்களும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இறுதி விரிவுரையை நிகழ்த்தினார்.
விரிவுரைகளைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் தமது கருத்துகள், அவதானிப்புகள் மற்றும் பின்னூட்டல்களை முன்வைத்தனர். இச்சட்டமூலங்களின் பாரதூரமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அடுத்தகட்டச் செயற்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான சமூக முன்னெடுப்புகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதி அம்சமாக, குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் தமிழ் மொழி மூல வரைவு வாசிக்கப்பட்டது.
சம்மேளனத்தின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ. உவைஸ் இதனைச் சபையில் வாசித்துக் காட்டினார்.
அந்த அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள், பிற்சேர்க்கைகள் மற்றும் வடிவமைப்பு தொடர்பில் பங்கேற்பாளர்களிடம் கருத்துகள் கோரப்பட்டன. அவற்றை உள்வாங்கி அறிக்கையை இற்றைப்படுத்தி, அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மெளலவி எஸ்.எச்.எம். றமீஸ் ஹாபிழ் ஜமாலி உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









