கட்டுப்பாட்டு விலையை மீறி கீறி சம்பா அரிசி விற்பனை: வியாபார நிலையத்திற்கு ரூ.100,000 அபராதம்.!!!
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு கீறி சம்பா அரிசி விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்றிற்கு ரூ.100,000 அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்றது.
இதன்போது, 5 கிலோ எடையுடைய கீறி சம்பா அரிசிப் பொதியொன்றை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட ரூ.300 அதிகமாக, ரூ.1,600க்கு விற்பனை செய்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வியாபார நிலையத்திற்கு ரூ.100,000 அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சந்தை நடவடிக்கைகள் தொடர்பான கண்காணிப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.