24 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: ஜனாதிபதி அனுர உறுதி.!!!
24 ஆண்டுகளாக முழுமை பெறாமல் கைவிடப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (22) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளமை நிந்தவூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு அதனை கையளிக்கவும், மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவும் இந்த கலாசார நிலையம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 945.04 மில்லியன் ரூபாவாகும். இதில் 300 மில்லியன் ரூபா 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகை தேவைக்கேற்ப வழங்கப்பட்டு 2027 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “2022 ஆம் ஆண்டைப் போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட இடமளிக்க மாட்டோம்” என உறுதியளித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும், அதை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் தேவையான ஆளுமையும் திறனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இனவாத அரசியலை முறியடித்து ஒற்றுமையான நாட்டை உருவாக்குவது, ஊழல் மற்றும் வீண் விரயங்களை ஒழிப்பது, அனைவருக்கும் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்துவது ஆகியவையே மக்கள் தமக்கு வழங்கிய ஆணை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளுக்கான அதிகப்படியான சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எரிபொருள், எரிவாயு, பால்மா மற்றும் உரங்களின் தட்டுப்பாடு மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம்” என மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி, மத்திய வங்கியில் தற்போது கணிசமான டொலர் கையிருப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், நிந்தவூர் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.













