“டெங்கு அற்ற கிழக்கு” செயற்திட்டம் ஆரம்பம்; ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஒன்றிணையுமாறு ரவூப் ஹக்கீம் அழைப்பு.!!!
டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த “டெங்கு அற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளிலான கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (26) சம்மாந்துறையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய ரவூப் ஹக்கீம், டெங்கு ஒழிப்பு என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பும் ஆகும் என வலியுறுத்தினார். பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் டெங்கு அற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
காலை 7.00 மணிக்கு சம்மாந்துறை தைக்காப்பள்ளிவாசல் அருகில் ஆரம்பமான இந்நிகழ்வில், டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு பணிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்களித்தனர்.
கிழக்கு மாகாணம் முழுவதும் இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.











